சாம்பல் புதன் நாளின் சிறப்புகள் !! - Ash Wednesday
சாம்பல் புதன் நாளின் சிறப்புகள் !! - Ash Wednesday
உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக் காலமாக அனுசரிக்கின்றனர்.
தவக்காலம் என்பது நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.
பழைய ஏற்பாடுகளில் எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் தவத்தைக் குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது கிறிஸ்துவின் மறைவிற்குப் பின் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்பதும், பழைய வழக்கத்திலிருந்து பெறப்பட்டதே என்பதும் உறுதியாகிறது.
கி.பி 900 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கத்தோலிக்கத் திருச்சபையில் அன்றைய தினத்தில் பாதிரியார் மக்களுடைய நெற்றியில் “மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே” என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார்.
இயேசு சிலுவை மரணத்தை சந்திக்கும் முன் எருசலேமிற்குள் நுழைந்த தினத்தில் மக்கள் ஒலிவ மரக் கிளைகளை அசைத்து அவரை வரவேற்றார்கள். அந்த நாளே இன்றைய திருச்சபையில் “குருத்தோலை தினம்” என கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் குருத்தோலைகளைப் பிடித்து பவனிகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினத்தில் ஆலய கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் ஓலையே அடுத்த ஆண்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு, “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் பூசப் பயன்படுகிறது.
பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து மனம் கசிந்து சாம்பலை உடலெங்கும் பூசி மேனி அழகைக் குறைத்துக் கொண்டும், கோணியை ஆடையாய் உடுத்தி ஏழ்மைக் கோலம் பூண்டும், தலைக்கு எண்ணை கூட தேய்க்காமல் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். அதன் நீட்சியாகவே “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக